‘‘விமான ஊழியர்களிடம் மோசமாக நடந்து கொள்ளும் பயணிகளுக்கு, 3 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை விமானத்தில் செல்ல தடை விதிக்கப்படும்’’ என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
சிவசேனா கட்சி எம்.பி. ரவீந்திர கெய்க்வாட், ஏர் இந்தியா விமானப் பயணியை அடித்ததாக புகார் எழுந்தது. இவர் விமானத்தில் உயர் வகுப்பு (பிசினஸ்) பயண டிக்கெட் வைத்திருந்தார். ஆனால், அவர் பயணம் செல்ல இருந்த ஏர் இந்தியா விமானத்தில் எல்லா இருக்கைகளும் சாதாரண வகுப்பாக (எகானமி) இருந்தது. இதனால் ஆத்திரம் அடைந்து எம்.பி. கெய்க்வாட் தகராறில் ஈடுபட்டதாகவும் விமான ஊழியரை அடித்ததாகவும் புகார் எழுந்தது. இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து விமானத்தில் பயணம் செய்ய அவருக்கு ஏர் இந்தியா தடை விதித்தது. இந்த தடை பின்னர் வாபஸ் பெறப்பட்டது.
அதேபோல் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி எம்.பி. ஒருவரும் விமானத்தை தவற விட்ட ஆத்திரத்தில் விமான நிலைய ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டார். ஆவணங்களையும் கிழித்தெறிந்தார். இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. விமானத்தில் செல்ல அவருக்கும் தடை விதிக்கப்பட்டு, பின்னர் வாபஸ் பெறப்பட்டது.
இந்நிலையில், விமான ஊழியர்களிடம் தரக்குறைவாக நடந்து கொள்ளும் பயணிகளுக்கு 3 மாதம் முதல் 2 ஆண்டு வரைதடை விமானத்தில் செல்ல தடை விதிக்கப்படும் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை நேற்று அறிவித்துள்ளது. இதுகுறித்து விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
விமான ஊழியர்களிடம் மோசமாக நடந்து கொள்ளும் பயணிகளுக்கு தடை விதிக்க 3 நிலைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அதன்படி முதல் நிலையில், மோசமான வார்த்தைகளால் விமான ஊழியர்களைத் திட்டும் பயணிக்கு 3 மாதம் விமானத்தில் செல்ல தடை விதிக்கப்படும்.
இரண்டாம் நிலையில், ஊழியர்களைத் தாக்கினால் சம்பந்தப்பட்ட பயணிக்கு 6 மாதம் தடை விதிக்கப்படும்.
மூன்றாவது நிலையில், ஊழியர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்தால் சம்பந்தப்பட்ட பயணிக்கு 2 ஆண்டுகள் முதல் காலவரையின்றி விமானத்தில் செல்ல தடை விதிக்கப்படும்.
இவ்வாறு விமானப் போக்குவரத்து துறை அமைச்சக அதிகாரி தெரிவித்தார்.- பிடிஐ

Post a Comment