கடந்த மே முதலாம் திகதி உலகெங்கிலும் கொண்டாடப்பட்ட சர்வதேச தொழிலாளர் தினம் இன்று இலங்கையில் கொண்டாடப்படவுள்ளது.
கடந்த ஏப்ரல் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் விசாக பூரணை அனுஸ்டிக்கப்பட்டதன் காரணமாக மகாசங்கத்தினரின் கோரிக்கைக்கு அமைய, அரசாங்கத்தினால் இலங்கையின் தொழிலாளர் தின நிகழ்வுகள் இன்றைய தினத்திற்கு பிற்போடப்பட்டது.
இதன் பிரகாரம் இன்றைய தினம் இலங்கையின் முக்கிய அரசியல் கட்சிகள் தமது மே தின பேரணிகளையும், கூட்டங்களையும் நடத்தவுள்ளன.
அதன்படி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தின நிகழ்வு மட்டக்களப்பு ஆலையடி வேம்பில், கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது.
இதேவேளை, ஜே.வி.பி.யினரின் மே தின நிகழ்வு கொழும்பு கெம்பல் பார்கில் இடம்பெறவுள்ளது.
அதேவேளை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரின் மே தின நிகழ்வு நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஸ தலைமையில் காலி சமனல மைதானத்தில் நடத்தப்படவுள்ளது.
இதேவேளை, மலையகத்தின் இரண்டு பிரதான கட்சிகளின் மே தின நிகழ்வுகள் இன்று நடத்தப்படவுள்ளன.
அதன்படி, தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதினக் கூட்டம் தலவாக்கலை பொது மைதானத்தில், கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன், இணைத்தலைவர்களான அமைச்சர் பழனி திகாம்பரம் மற்றும் இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஸ்ணன் ஆகியோர் தலைமையில் இடம்பெறவுள்ளது.
அதேவேளை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில், தமது மே தின நிகழ்வுகளை நுவரெலியா நகரில் நடத்தவுள்ளது.
இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் மே தின நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்றைய தினம் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடத்தப்பட்டது.
இது தவிர, ஜனநாயக மக்கள் முன்னணியின் மே தின பேரணியொன்று நேற்றைய தினம் கொழும்பு ஜிந்துப்பிட்டியில் இருந்து ஜெம்பட்டா வீதி வரையில் முன்னெடுக்கப்பட்டது.
Post a Comment