கண்டி காவற்துறை பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட மகாசோன் அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்ஹ உள்ளிட்ட 28 பேர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்றைய தினம் தெல்தெனிய நீதவான் எம்.எச்.பரீக்தீன் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டனர்.
இதற்கமைய அவர்களை மே மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகத்துக்குரிய அமித் வீரசிங்ஹ தற்போது அநுராதப்புரம் விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய 27 பேரும் பல்லேகலை தும்பர விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
திகன உள்ளிட்ட பல பிரதேசங்களில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டமை மற்றும் இன வன்முறை தூண்டும் செயல்களை முன்னெடுத்தமை தொடர்பிலே அமித் வீரசிங்ஹ உள்ளிட்ட 18 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
கைதானவர்களில் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரும் அடங்குகின்றார்.
தெல்தெனிய பகுதியில் வர்த்தக நிலையங்களை எரியூட்டியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மேலும் 10 பேர் கடந்த மார்ச் மாதம் 4 ஆம் திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடதக்கது.
Post a Comment