தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்தில் கூறப்பட்ட விடயங்களின் தமிழ், சிங்கள மொழியாக்கத்தை எழுத்து மூலம் சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு பிரதான நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் இன்று இடம்பெற்றது.
இதன்போது அரச கரும மொழிகள் திணைக்கள ஆணையாளருக்கு நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து காவல்துறை தலைமையகத்திற்கு கிடைத்த முறைப்பாடு தொடர்பில் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின்போது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த குரல்பதிவை பரிசீலித்து அதில் கூறப்பட்டுள்ள விடயங்களை தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் மொழிபெயர்த்து, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் தடுப்பு விசாரணைப் பிரிவிடம் வழங்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை எதிர்வரும் 20ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் விசாரணை அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
Post a Comment